தமிழ்நாடு

தொடர் கனமழை - விழுப்புரம், கடலூரில் நிரம்பும் நீர்நிலைகள்

கலிலுல்லா

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தளவானூர் தடுப்பணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பையூர், கொங்கராயநல்லூர், சேத்தூர், மாரங்கியூர் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.

இதே போல கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மிதக்கிறது. விருத்தாசலம் பேருந்து நிலையம், காட்டுக்கூடலூர் சாலை, கடைவீதி பகுதிகளில் மழை நீருடன், கழிவுநீரும் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 காவல்துறையினர், 220 தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.