மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழகத்திலுள்ள 15 மாநகராட்சிகள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கு மேயர் மற்றும் மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அரசு சுயலாப நோக்கத்துடன் மறைமுகத் தேர்தலை அமல்படுத்தியுள்ளது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. இந்தத் தேர்தல் முறை பெரியளவில் குதிரை பேரம் நடைபெற வழி வகுக்கும்.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்போது இணக்கமான சூழல் ஏற்படும். கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. அவர்களால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.
கடந்த திமுக ஆட்சியில் இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைமுகத் தேர்தல் முறை பல்வேறு முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கும் என்று கூறி நேரடித் தேர்தல் முறையை அமல்படுத்தினார். தற்போது ஜெயலலிதாவை தலைவராக ஏற்று ஆட்சி செய்வோர் நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து மறைமுகத் தேர்தல் முறையைக் கொண்டு வந்துள்ளனர்.
சரியான நோக்கத்துடன் மறைமுகத் தேர்தல் முறை அமல்படுத்தப்படவில்லை. அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அந்த முடிவு மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.