தமிழ்நாடு

நாம் தமிழர் - ஆதித்தமிழர் கட்சியினரிடையே கடும் மோதல் - காரணம் என்ன?

webteam

அருந்ததியர்களை அவதூறாக பேசியதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட வந்தபோது, இரு தரப்பினரும் மாறி, மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதைக் கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கைகளில் கட்சிக்கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.

ஆற்காடு சாலையில் வந்த அவர்களை போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து போலீசாரின் தடுப்பையும் மீறி பத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது அங்கு இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு கையில் சிக்கிய ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கிருந்து அவர்கள் அங்கிருந்து ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஏற்கெனவே போலீசாருக்கு வந்த தகவலையடுத்து முறையான பாதுகாப்பு பணியிலும் முன் எச்சரிக்கையாகவும் இல்லாமல் போரூர் போலீசார் இருந்த காரணத்தால் இந்த அடிதடி சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.