Theni  X
தமிழ்நாடு

தமிழக அரசியலின் நட்சத்திர மாவட்டம்.. திமுக - அதிமுக இடையே கடும் போட்டி.. யார் வசமாகும் தேனி?

தமிழக அரசியலின் நட்சத்திர மாவட்டமும் அதிமுகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டையுமாக இருந்தது தேனி. தற்போது இங்கு இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

PT WEB

தேனியில் அதிமுகவின் பலம் குறைந்து, திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 2021 தேர்தலில் அதிமுகவின் கோட்டை தளர்ந்து, திமுக கூட்டணி மூன்று தொகுதிகளை கைப்பற்றியது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்ததால், அதிமுகவுக்கு சவால் அதிகரித்துள்ளது. முக்குலத்தோர் சமூகத்தின் ஆதிக்கம், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது.

அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்பட்ட தேனி மாவட்டத்தின் தேர்தல் வரலாறு சுவாரசியமானது. கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக இங்கு பலத்தைக் காட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளியது அதிமுக. 2001இல் நான்கில் மூன்று தொகுதிகளையும், 2006 மற்றும் 2011இல் இரண்டு தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக.

Jayalalithaa

குறிப்பாக, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஆண்டிபட்டியில் 9 முறையும், பெரியகுளம் மற்றும் போடியில் தலா 7 முறையும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால், 2021இல் அதிமுகவின் கோட்டையை, கோட்டைவிட்டு நான்கில் ஒரு தொகுதியை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்தது. மீதமுள்ள 3 தொகுதிகளை திமுக கூட்டணி தட்டிச் சென்றது.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதால், அதிமுகவின் பலம் இந்த மாவட்டத்தில் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. தொகுதி மறு சீரமைப்பு 2006-ஆம் ஆண்டுக்கு முன்புவரை இருந்த தேனி சட்டமன்றத் தொகுதி சந்தித்த 12 தேர்தல்களில் 6 முறை அதிமுக, நான்கு முறை திமுக, தலா ஒரு முறை காங்கிரஸ், தமாகா வென்றுள்ளன. தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைத் தேர்ந்தெடுத்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்த பெருமை ஆண்டிபட்டிக்கு உண்டு.

Jayalalithaa

2026ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 35 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது திமுகவின் ஏ.மகாராஜன் சட்டமன்ற உறுப்பினராக உள்ள இத்தொகுதி, ஒரு காலத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது. இன்று இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

சமூகரீதியாக, பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தினரே இங்கு பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், வேட்பாளர் தேர்விலும் இச்சமூகத்தினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாவட்டத் தலைநகரான தேனியை உள்ளடக்கிய பெரியகுளம், ஆதிதிராவிடர் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 55 ஆயிரத்து 981 வாக்காளர்களைக்கொண்டுள்ள இத்தொகுதி, மாம்பழ உற்பத்தி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

தற்போது திமுகவின் சரவணகுமார் எம்.எல்.ஏவாக உள்ளார். இத்தொகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட பட்டியல் சமூகத்தினர் கணிசமாக இருந்தாலும், தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் அகமுடையார், கள்ளர், நாயக்கர் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ள போடிநாயக்கனூர் தொகுதி, 2 லட்சத்து 52 ஆயிரத்து 964 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. ஏலக்காய் வர்த்தகம் மற்றும் கேரள எல்லைப் பகுதி என்பதால் பொருளாதாரரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகரீதியாக இங்கு முக்குலத்தோருக்கு இணையாக நாயக்கர் சமூகத்தினரும் அதிக அளவில் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இங்கு தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு முக்குலத்தோர் மற்றும் நாயக்கர் சமூக வாக்குகளின் பலமே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

O Paneerselvam

முல்லைப் பெரியாறு அணை நீரால் எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் கம்பம் தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 584 வாக்காளர்கள் உள்ளனர். திமுகவின் மூத்த தலைவர் இராமகிருஷ்ணன் தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். சிறுபான்மையினர் வாக்குகள் இங்கு வெற்றியின் திசையைத் தீர்மானிக்கின்றன. தேனி மாவட்டம் முழுவதையும் பொறுத்தமட்டில், முக்குலத்தோர் சமூகத்தினரே அரசியல் அதிகார மையத்தில் முதன்மையானவர்களாக இருக்கின்றனர்.

அவர்களுக்கு அடுத்தபடியாக நாயக்கர் மற்றும் கவுண்டர் சமூகத்தினர் மாவட்டத்தின் பொருளாதார மற்றும் தேர்தல் அரசியலில் வலுவான செல்வாக்கு பெற்றுள்ளனர். எழில் கொஞ்சும் தேனி, மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது.