தமிழ்நாடு

கொரோனாவுக்கு பெண் மருந்தாளுநர் பலி - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குடும்பத்தினர் வேதனை

webteam

திருவள்ளூரில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வந்த பெண் மருந்தாளுநர் கொரோனாவால் உயிரிழந்தார்.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ஷபிலா(34). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் மருந்தாளுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் உள்ள வட்டார மருத்துவமனையில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுபவர்களுக்காக உதவுவது, டெங்கு காய்ச்சல் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார் ஷபிலா.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிராமம் கிராமமாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது, கொரோனா பரிசோதனை செய்வது போன்ற பணிகளில் கடம்பத்தூர் வட்டார மருத்துவமனையில் பணியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியானது. 

சென்னை தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் 5 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்றிரவு உயிரிழந்தார். ஆனால் மாவட்ட சுகாதாரத்துறை சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ யாரும் கண்டுகொள்ளவில்லை என அந்தப் பெண்ணின் குடும்பத்தார் வேதனை தெரிவித்துள்ளனர்.