தமிழ்நாடு

விஷப்பாம்பு கடித்தும் இப்படியா அசால்ட்டாக இருப்பது; மாணவர் விடுதி பெண் காவலர் பரிதாப மரணம்

Sinekadhara

ஏலகிரி மலை அரசு மலைவாழ் மாணவர் விடுதியில் இரவு காவல் பணியில் இருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு மலைவாழ் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். அந்த விடுதியில் அரசு சார்பில் ஐந்து பேர் விடுதியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த விடுதியில் சண்முகம் என்பவரது மனைவி ருக்மணி (57) இரவு பெண் காவலராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விடுதியை சுற்றிவரும் பொழுது எதிர்பாராதவிதமாக கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ருக்மணி மருத்துவமனைக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியுள்ளார்.

பாம்பின் விஷம் கடுமையாக பரவியதால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடுதியிலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விடுதிக்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.