தமிழ்நாடு

சப்-வேயில் மழை நீர்: காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பெண் டாக்டருக்கு நேர்ந்த சோகம்!

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் அவ்வழியே காரில் சென்ற பெண் மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வெள்ளனூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. இரவில் அவ்வழியே தனது மாமியார் ஜெயம்மாளுடன் சென்ற சத்யா என்ற பெண் மருத்துவர், காருடன் மழைநீரில் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து காருக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், அவ்வழியே சென்ற சிலர், ஜெயம்மாளை மீட்டனர். அதேநேரத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்த மருத்துவர் சத்யாவை உடனடியாக மீட்க முடியாததால் அவர் உயிரிழந்தார். ஒசூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சத்யா, சொந்த ஊருக்கு வந்தபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், மேம்பாலம் கட்டுவதற்குப் பதில் சுரங்கப் பாதை அமைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் எனக்கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் சுரங்கப் பாதையில் மின் விளக்கு வசதி இல்லாமல் இருள்சூழ்ந்து இருந்ததாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.