தமிழ்நாடு

குப்பைக் கொட்டுவதற்கு சென்னையில் ஜனவரி 1 முதல் கட்டணம்: முழு விவரம்!

Sinekadhara

சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி குப்பைக் கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், வணிக இடங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஏழாயிரத்து 500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும். உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் மூவாயிரம் வரையிலும், திரையரங்குகள் 750 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலும் செலுத்தவேண்டும். பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும், மருத்துவமனைகள் இரண்டாயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என சென்ன மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் விதிகளை மீறி குப்பைகளைக் கொட்டுவோரிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் குப்பைகளைக் கொட்டினால் 500 ரூபாய் வரையிலும், கட்டட கழிவுகளைக் கொட்டினால் 5000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை தரம்பிரித்து அளிக்கத் தவறினால் 5000 ரூபாய் வரையிலும், குப்பைகளை எரித்தால் 2000 ரூபாய் வரையிலும் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.