தமிழ்நாடு

"சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகியிருப்பது எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம்

sharpana

”மத்திய அரசில் சுகாதார அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் ராஜினாமா பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவின் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான பேரிடர் போராட்டத்தை கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக தலைமை தாங்கி நடத்தி வந்தவர் அமைச்சர் ஹர்ஷ்வர்தன். என்றாலும் கொரோனா முதல் அலையின்போது இவரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை, ஏப்ரல் - மே மாதங்களில் நிகழ்ந்த கொரோனா இரண்டாவது அலையில் பெரிதும் தடுமாறிப் போனது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் இருந்து இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பில் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்டது என்பது வரை பல்வேறு விமர்சனங்கள் மத்திய அரசை நோக்கி பாய்ந்தன. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறைகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில், இன்று பதவி விலகிய அமைச்சர்களில் ஹர்ஷவர்தனும் ஒருவர்.

இதனால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மத்திய அரசில் சுகாதார அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது? கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுத் தோல்வியை அடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று இவர்கள் நாள்தோறும் ஏன் பறைசாற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.