தமிழ்நாடு

கரடிகளால் அச்சம்: தீ பந்தத்துடன் வன உயிரின கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

webteam

முதுமலை வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கரடிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தீ பந்தங்களை கையில் வைத்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவ மலைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நேற்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்சமயம் முதுமலை வனப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே முதுமலை வனப்பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை கரடி தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்சமயம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கரடி தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தீ பந்தங்களை எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. அதன்படி வனப்பகுதிக்குள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் தங்கள் கைகளில் தீ பந்தங்களை வைத்தவாறு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒருவேளை கரடி அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்பட்டால் இந்த தீ பந்தங்களை பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் தேவைப்பட்டால் மட்டுமே தீ பந்தங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.