தமிழ்நாடு

‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி

‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி

webteam

தன்னுடைய மகள் பாத்திமாவின் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை என அவரின் தந்தை அப்துல் லத்தீஃப் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி கடந்த வாரம் தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சென்னை வந்துள்ள பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் மகளின் தற்கொலை தொடர்பாக விளக்கம் தேவை. சுதர்சன் பத்மநாபன் தான் என் மரணத்திற்கு காரணம் என மகள் குறிப்பு எழுதியுள்ளார். 

எந்த ஒரு காரியத்தையும் பாத்திமா கடிதமாக எழுதிவைப்பார். அதேபோல் இதையும் செய்துள்ளார். ஆனால் எப்.ஐ.ஆரில் அதுபற்றி குறிப்பிடவில்லை. பாத்திமாவுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தனக்கு துன்புறுத்தல் நடைபெறுவதாக பாத்திமா தினமும் என்னிடம் பேசுவார். எனது மகள் நன்றாக படிக்கக்கூடியவர். எல்லா பாடங்களிலும் முதல் இடத்தில் இருந்தார். நவம்பர் 8 ஆம் தேதி இரவு ஒருமணி நேரம் ஐஐடி கேண்டீனில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளார். 

என் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் வந்து பார்த்தபோது அறையில் கயிறு இல்லை. அந்த அறைக்கு சீல் வைக்கவும் இல்லை. சம்பவங்களை பார்த்தபோது பாத்திமா மரணம் தற்கொலை போல் தெரியவில்லை. பாத்திமா போன்று வேறு எவருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. தனது மகளின் மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கப்படுவர் என டிஜிபி உறுதி தந்துள்ளார். தமிழக அரசு மீதும், டிஜிபி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.