என் மகளுக்கு பிடித்த ஊர் என்பதால் அவரை படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பினேன் என பாத்திமாவின் தந்தை லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி கடந்த வாரம் தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை வந்துள்ள பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோரையும் லத்தீஃப் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று பாத்திமாவின் தந்தை லத்தீஃப்பிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லத்தீஃப், “என் மகளுக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் அவரை படிப்பதற்காக அங்கு அனுப்பினேன். அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தோம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். இனி ஒரு பாத்திமா இறப்பு தொடரக்கூடாது என வலியுறுத்தினோம். பாத்திமா மரணத்தில் உண்மை வெளிவெரும். குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.