தமிழ்நாடு

அசுரன் பாணியில் நடந்த சோகம் - மகனுக்காக இளைஞர்கள் காலில் விழுந்த தந்தை உயிரிழப்பு

Sinekadhara

திருத்துறைப்பூண்டி அருகே கோயில் திருவிழா தகராறில் மகனுக்காக, இளைஞர்கள் காலில் விழுந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிச்சனகோட்டகத்தில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் நடராஜன் மகன் நாகூர்மீரானுக்கும், அஞ்சுகண்ணு மகன் கலைசெல்வனுக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. இந்த விவகாரத்தி்ல் பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்தை கட்டமுடியாத 65 வயது அஞ்சுகண்ணு, தன்னைவிட வயதில் சிறியவரான நாகூர் மீரான் மற்றும் சிலரது காலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்திருந்த அஞ்சுகண்ணு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அஞ்சுகண்ணு உயிரிழந்த விவகாரத்தில், அவரை காலில் விழவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாதாக போலீசார் உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது வரை போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அஞ்சுகண்ணு குடும்பத்தினர், உறவினர் மற்றும் கிராமத்தினர் ஏராளமானோர் திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே இரண்டாவது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சுகண்ணுவின் மகன் கலைசெல்வன் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மறியல் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மறியலால் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை, நாகை சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.