தமிழ்நாடு

குடும்ப தகராறில் குழந்தைகளைக் கொன்ற தந்தை: கோவை கொடூரம்

குடும்ப தகராறில் குழந்தைகளைக் கொன்ற தந்தை: கோவை கொடூரம்

Rasus

கோவையில் 2 பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியோடியதாக, அவர்களின் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒரே வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டிருப்பதால் சோகத்தில் உறைந்து கிடக்கிறது கோவையில் உள்ள மசக்காளிபாளையம். இங்குள்ள நீலிகோணார் வீதியில் பத்மநாபன்-செல்வராணி தம்பதியர், குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு வர்ஷினி, ஸ்ரீஷா என்ற இரு மகள்கள் இருந்தனர். பத்மநாபன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுவதால், தம்பதியர் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

6-ஆம் தேதி இரவு பத்மநாபனுக்கும், செல்வராணிக்கும் இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து அவர்களின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். மீண்டும் பிரச்னை ஏற்படலாம் என்பதால் அன்று இரவு மட்டும், மகள்களுடன் உறவினர்கள் வீட்டில் தங்குமாறு செல்வராணிக்கு காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரித்த பத்மநாபன், 2 பெண் குழந்தைகளை தம்மிடம் இருந்து அழைத்துச் சென்றால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி கதறி அழுதுள்ளார். அதனால், 2 மகள்களையும், பத்மநாபனுடன் விட்டுச் சென்ற செல்வராணி, உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார்.

பத்மநாபனின் தாயார் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது. சிறுமிகள் இரண்டு பேரும் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே அதிகாலையிலேயே வீட்டில் இருந்து வந்த பத்மநாபன், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

சிறுமிகளின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். மதுபோதையில் தனது மகள்களை பத்மநாபனே கொலை செய்தாரா? இல்லையென்றால் நல்ல நினைவோடு தான் கொலை செய்தாரா..? கொலை செய்யப்படும் முன் சிறுமிகள் இருவரும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனரா? என்ற பல கேள்விகள் காவல்துறை முன் எழுந்துள்ளன.

இவற்றிற்கு விடைதேடும் முயற்சியாக பத்மநாபனை தேடும் பணியில் இறங்கியுள்ளது காவல்துறை. இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.