house pt desk
தமிழ்நாடு

பாலூட்ட வர மறுத்த தாய்.. 14 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை..!

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த தந்தை இதில், 14 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சிவக்குமார் சத்யா தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்துள்ளது. அதேபோல், நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்யா தனது மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதில், 14 மாத கைக்குழந்தை மித்ரா, பசியால் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறது. இதைக் கண்ட சிவகுமார், வீட்டிற்கு வருமாறு தொலைபேசியில் சத்யாவை அழைத்துள்ளார். ஆனால் சத்யா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து சிவக்குமார், நிலத்திற்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை பாலில் கலந்து அழுது கொண்டிருந்து தனது 14 மாத கைக்குழந்தை மித்ராவிற்கு கொடுத்துள்ளார். பின்னர் தனது நான்கு வயது மகள் இலக்கியாவிற்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்துவிட்டு தானும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார்.

இதில் பூச்சி மருந்து கலந்த சாப்பாட்டை சாப்பிட முடியாமல் அழுது கொண்டிருந்த இலக்கியாவை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த பொழுது, 14 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

பின்னர் தந்தை மற்றும் இரண்டு மகள்களையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மித்ரா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதைடுத்து சிவக்குமார் மற்றும் மகள் இலக்கியா ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.