தமிழ்நாடு

போலீஸார் மிரட்டல்: கோவையில் மகனுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

போலீஸார் மிரட்டல்: கோவையில் மகனுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

webteam

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகனுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கருமத்தாம்பட்டியை சேர்ந்த விசைத்தறியாளர் குமார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சோமனூர் பகுதியை சேர்ந்த பானு ஜுவல்லரி உரிமையாளர் மோகன்ராஜ் என்பவருக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மோகன்ராஜிடம் பணத்தை திரும்பி கேட்ட போது அவர் பணத்தை தர மறுத்துள்ளர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் தற்போது உள்ள சூழலில் உன் மீது கந்துவட்டி வசூல் செய்வதாக வழக்கு பதிவு செய்து விடுவேன் என கருமத்தாம்பட்டி காவல்துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் இன்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்த குமார், தீடீரென தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை மகன் மற்றும் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அங்குள்ள காவல்துறையினர், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுவதாகவும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி, தந்தை மற்றும் மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம், காவல்துறை கண்காணிப்பாளர் ஆலுவலத்தில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.