தமிழ்நாடு

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு: ‘முறையாக விசாரிக்கப்படவில்லை’ என தந்தை புகார்

கலிலுல்லா

சிபிஐ தரப்பிலிருந்து சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, அது அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கு மாற்றப்பட்ட பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களும், செல்போன் பதிவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் மாணவர்களுக்கான பிரச்சினை குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்விளைவாக பாத்திமா வழக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் 15-ம்தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ, டிசம்பர் 27-ம்தேதி 174 என்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்தனர். பின் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் மற்றும் அவரது வழக்கறிஞர் முஹம்மது ஷா இணைந்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வழக்கறிஞர் முஹம்மத் ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாத்திமா தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை முடிக்கப்பட்டுள்ளது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை பிரிந்திருந்த காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாத்திமா தற்கொலையில் ஈடுபட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. சிபிஐ இதை தெரிவித்து இந்த வழக்கை முடித்தாலும், நாங்கள் இதை விட மாட்டோம். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் சிபிஐ விசாரணை இல்லாமல், வேறொரு விசாரணை குழுவை அமைத்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

தற்கொலைக்கு பேராசிரியர்கள் சிலர் காரணம் என தகவல்கள் வெளியான நிலையில், வீட்டை விட்டு பிரிந்துதான் காரணம் எனக் கூறுவது குற்றவாளிகளை மறைப்பதற்கு துணை போவதாக உள்ளது. எனினும் எங்கள் தரப்பில் சட்ட ரீதியாக போராடுவோம். சிபிஐ-யின் அறிக்கையை பெற்ற பின்னர் மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்று கூறினார். இதையடுத்து பாத்திமாவின் தந்தை லத்தீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் மகள் பாத்திமா மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" என்று கூறினார்.