சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிக்காக விளைநிலத்தை கையகப்படுத்த வேண்டாம் எனக்கூறி அதிகாரிகளின் காலில் விவசாயிகள் விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்ய மத்தி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில், 570 ஏக்கர் நிலையத்தை கையகப்படுத்த இரண்டு வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களை மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலையிலான அதிகாரிகள் ஆய்வுகள் செய்தனர். மேலும், விமான நிலைத்திற்கு நிலம் எடுக்க நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரும் ஆய்வுகள் செய்தனர். சுமார் 570 ஏக்கர் நிலத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம், கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள மரம், செடி, பயிர், வீடுகள், இதர கட்டடங்கள், கோவில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், நெல், கரும்பு, வாழை விளையக்கூடிய விவசாய நிலங்களையும் பார்வையிட்டனர். இதையடுத்து விமான நிலையத்தின் நிலமெடுப்பு குழுவிற்கு 570 ஏக்கர் நிலங்களின் வரையறைகளை காட்டி அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அப்போது அங்கு கூடிய விவசாயிகள் அதிகாரிகளின் காலில் விழுந்து நிலங்களை எடுக்கவேண்டாம் எனக் கூறினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறும் போது, பாதிக்கப்படுவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.