டெல்லியில் போராடும் விவசாயிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிடுவது பற்றி இன்று மாலை முடிவு செய்ய இருப்பதாக தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளை அவர் இன்று காலைச் சந்தித்தார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அவருடன் இருந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, ‘விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிப்பேன்’ என்று கூறினார்.இதையடுத்து விவாசயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
இதுபற்றி அய்யாக்கண்ணு கூறும்போது, ‘தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சியினரும் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுள்ளனர். முதலமைச்சரும் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிடுவது பற்றி இன்று மாலை முடிவு செய்வோம்’ என்றார்.