தமிழ்நாடு

உயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ்

உயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ்

webteam

விளைநிலங்கள் வழியே உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே 6 நாட்கள் விவசாயிகள் உண்ணாவிரத போராமும் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி வந்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்போது அவர்கள் வந்தாலும் அவர்களை அழைத்து கொண்டு சென்று முதலமைச்சரிடம் பேச தயாராக இருக்கிறோம் எனவும் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஆதரவான உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.