தமிழ்நாடு

உடலில் சேற்றைப் பூசி விவசாயிகள் போராட்டம்

Rasus

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஐந்தாவது நாளாகப் போராடி வருகின்றனர். உடலில் சேற்றைப் பூசியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வறட்சி நிவாணத்துக்கு அதிகப்படியான நிதி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 19-ஆவது நாளாக, இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர்களை விவசாயிகள் சந்தித்த போதும் இன்னும் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்தால் தான் தங்களது போராட்டம் கைவிடப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் போராட்டத்தில் குதித்தனர். கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய இவர்களின் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. தங்களின் உடலில் சேற்றைப் பூசியபடி இன்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடடியாக அமைக்க வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைளையும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.