டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி தருவதாக முதலில் கூறிவிட்டு பின்னர் மறுப்பதாக காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு இன்னல்கள் நேரிடுவதாகவும், ஆகையால் இன்றைய போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து இன்று நடைபெறும் இந்த போராட்டத்தில் 50 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக அரசு கேட்ட வறட்சி நிவாரண நிதி ரூ.39,565 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.