நெல் கொள்முதலில் அரசின் செயல்பாடுகளால் தஞ்சை உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களில் தனியாரிடம் நெல் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 59 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை நடந்துவருகிறது. இந்நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வார காலம் வரை நெல்லை கொட்டிவைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும், ஈரப்பதம் 17 விழுக்காடு இருந்தால்தான் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில், தனியார் வியாபாரிகள் களத்துமேட்டுக்கு சென்று விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறனர். நெல் எவ்வளவு ஈரப்பதமாக இருந்தாலும் வியாபாரிகள் அப்படியே வாங்குவதாகவும், நெல்லை கொள்முதல் நிலையம் கொண்டுசெல்ல வாகன செலவு, நெல் விற்க காத்திருப்பது போன்றவை இல்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். அரசு தரும் விலையைவிட வியாபாரிகள் சற்று குறைத்து கொள்முதல் செய்தாலும் சிரமமின்றி விற்பனை செய்ய முடிவதாகக் கூறுகின்றனர்.
நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரிடம் கேட்டபோது, விவசாயிகள் கொண்டுவரக்கூடிய நெல் அனைத்தையும் கொள்முதல் செய்ய தயாராக இருப்பதாகவும், 17 விழுக்காட்டுக்கும் அதிகமாக ஈரப்பதம் இருந்தால் நெல்லை உலர்த்தித் தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.