தமிழ்நாடு

பணமும், நேரமும் மிச்சமாக விவசாயி கண்டுபிடித்த மாற்று வாகனம்..!

webteam

விவசாய இயந்திரங்களின் விலை பல மடங்கு உயர்ந்ததையடுத்து பணத்தை மிச்சம் செய்யும் வகையில் விவசாயி ஒருவர் மாற்று வாகனத்தை கண்டுபிடித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினால் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்களின் வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். சிலர் வேறு வழியின்றி ஒரு மணி நேரத்திற்கான இயந்திரங்களின் வாடகையை இரண்டு மடங்காக கொடுத்து தங்கள் விளை நிலத்தில் விளைந்த தானியங்களை அறுவடை செய்து வருகின்றனர்.

இதனிடையே காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாரதி என்பவர் அவரது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு தொழுஉரம் எடுத்து செல்ல வாடகைக்கு டிராக்டர் கேட்டுள்ளார். டிராக்டர் உரிமையாளர் தொழுவுரத்தை கொண்டு செல்ல ஒரு டிப்பருக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும் என கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பாரதி மாற்று யோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டில் பயன்படுத்தப்படாத இருசக்கர வாகனம் ஒன்றை புதிதாக மாற்றி அமைத்து தற்போது விவசாய பணிக்கு அதை ஈடுபடுத்தி வருகிறார். இவர் தயாரித்த புதிய வண்டியில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஒரு டிப்பர் எடுத்துச் செல்லக்கூடிய தொழுவுரத்தை அவரின் வீட்டிலிருந்து அவர் தோட்டத்திற்கு மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடிவதாக கூறுகிறார்.

இதனால் 900ரூபாய் லாபம் கிடைத்துள்ளது எனவும் அதுமட்டுமில்லாமல் விளைநிலங்களில் சிறிய பொதுவழி ஒன்றை அமைத்தால் விவசாயிகள் தானியங்களை தலைமேல் தூக்கி செல்லும் பாரம் மற்றும் நேரம் குறையும் என்கிறார் பாரதி. மேலும் விவசாயத்திற்கு தேவையான மூட்டைகள் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் என அனைத்தையும் இவரால் தயாரிக்கப்பட்ட அந்த வண்டியில் வைத்து மிகவும் எளிதாக கொண்டு செல்ல முடிகிறது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவருடைய யோசனையைப் பின்பற்றி அப்பகுதியில் இருக்கக்கூடிய மற்ற விவசாயிகளும் இதே மாதிரி வாகனங்கள் செய்ய முயன்று வருகிறார்கள். பலரும் இவருடைய வாகனங்களை இரவலாக வாங்கி சென்று தங்களுடைய விளை நிலங்களிலும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கிறார்.