அடகு வைத்த மனைவியின் தாலி செயினை மீட்க சென்றவரிடம் பயிற்கடனைக் கட்ட வங்கி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் விவசாயி வேம்பு கிருஷ்ணன் என்பவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வேம்பு கிருஷ்ணன், இவர் கடத்த 2007 -2008 ஆம் ஆண்டில் மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிர்கடன் பெற்றுள்ளார். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அவர் இந்த விவசாய கடனை கட்டியுள்ளார்.
மேலும் நெற்பயிருக்காக வாங்கிய 90 ஆயிரம் ரூபாய் கடனை கடந்த சில ஆண்டுகளாக போதிய விளைச்சல் இல்லாததாலும் உடல் நலக்குறைவு காரணமாகவும் கட்ட முடியாமல் போனது.
இந்நிலையில் 50 ஆயிரத்துக்கு, அடகு வைத்த மனைவியின் தாலி செயினை மீட்க நேற்று வங்கிக்கு சென்றுள்ளார், ஆனால் பயிர்கடனை தந்தால்தான் செயினை திருப்பி தரமுடியும் என்று வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். வங்கியில் மூன்று மணிநேரம் போராடிய வேம்பு கிருஷ்ணனால் மனைவியின் தாலி செயினை மீட்க முடியாமல் போனது. மனமுடைந்த வேம்பு கிருஷ்ணன் நேற்று இரவு நெல்லை டவுனில் உள்ள தனது மகன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக வங்கி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலினின்றி வேம்பு இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நெல்லை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.