தமிழ்நாடு

வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை 

வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை 

webteam

சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி என்பவர் கோவையில் வங்கி முன்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்காக நண்பர்கள் மூவருடன் சேர்ந்து கோவை இந்தியன் வங்கியில் சுமார் 9 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். பால் பண்ணை லாபகரமாக இயங்காததால் வங்கி கடனை சரிவர செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. இந்த கடனுக்காக பூபதி சில அடமான பத்திரங்களை வங்கியில் செலுத்தியுள்ளார். 

இதைத்தொடர்ந்து தன் பங்கிற்கு ஒரு பகுதி கடனை திருப்பி செலுத்தி பத்திரங்களை மீட்க பூபதி முயன்றுள்ளார். ஆனால் நண்பர்களின் கடனையும் சேர்த்து செலுத்துமாறு வங்கி அதிகாரி நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் வங்கி மேலாளருக்கும் பூபதிக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. 

இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்து வங்கி முன்பு விவசாயி பூபதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.