நரபலி கொடுக்கப்பட்ட நபரின் உடலை மீட்ட போலீசார்
நரபலி கொடுக்கப்பட்ட நபரின் உடலை மீட்ட போலீசார்  PT WEB
தமிழ்நாடு

கோவை | "மது வாங்கித் தருகிறேன், வாங்க" - டாஸ்மாக் வாசலில் இருந்தவரை அழைத்து நரபலி கொடுத்த விவசாயி???

விமல் ராஜ்

செய்தியாளர் - இரா.சரவணபாபு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில், சுப்பம்மாள் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த இடத்திற்குச் சென்று சுப்பம்மாள் பார்த்தபோது, ஒரு மனித மண்டை ஓடும், அழுகிய நிலையில் பாதி உடலும் கிடந்ததுள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த சடலம் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் என தெரியவந்தது. உடல் இரண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் பூஜை பொருட்கள் கிடந்ததால், இது நரபலியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிவில் கோவை புலியகுளத்தை சேர்ந்த முத்து (45) என்பவர்தான் இக்கொலைக்கு காரணமென காவல்துறையினருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கொலகோம்பையில் உள்ள கோயிலுக்கு முத்து தப்பிச் சென்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு விரைந்து சென்ற போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் முத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துவுக்கு மாந்திரிகத்தில் நம்பிக்கை இருந்ததால் சிறப்புப் பூஜை செய்து யாரையாவது நரபலி கொடுப்பதற்காகத் திட்டம் தீட்டியுள்ளார் எனட தெரியவந்துள்ளது.

இதற்காக டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்கப் பணம் இல்லாமல் நின்று கொண்டிருந்த நபரிடம், "நான் மது வாங்கி தருகிறேன்" எனக் கூறி அவரை தேவனாம்புரம் அழைத்து வந்துள்ளார்.

முத்து

பின்னர் இருவரும், ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் போதையில் இருந்த அந்த நபரை வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்துள்ளார் முத்து. இதில்தான் முத்து அந்நபரை நரபலி கொடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

அதேநேரம், இது இன்னும் முழுமையாக உறுதியாகாததால் காரமடை போலீசார் இதனை நரபலி வழக்காக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. டாஸ்மாக் கடையில் நடைபெற்ற தகராறு காரணமாக குறிப்பிட்ட நபர் கொலை செய்யப்பட்டதாகவும் தொடர்புடைய குற்றவாளி காரமடை அருகே வழக்கமான ரோந்து பணியின் போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்தகட்ட விசாரணைக்குப் பின்னரே முழு தகவல் தெரியவரும்.