தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றுழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெறக்கூடும்.
மேலும், இது 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி வடதமிழக கடற்கரை பகுதியையொட்டி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், 27, 28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார். வங்கக் கடலில் 29ஆம் தேதி உருவாகவுள்ள அந்தப் புயலுக்கு ‘ஃபனி’ எனப் பெயரிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. தொடர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அந்த புயலுக்கு ஏற்கனவே கூறியபடி ஃபனி (FANI) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சென்னையில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் மற்றும் வருவாய் துறை செயலர் அதுலி மிஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அதில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அலோசனை நடத்தியதாக தெரிகிறது.