தமிழ்நாடு

ஒடிசாவை நோக்கி ஃபோனி புயல் : கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமானது !

webteam

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபோனி புயல், நாளை மறுநாள் ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும் என்பதால், அந்த மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபோனி புயல், தற்போது, கடுமையான புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, ஒடிசாவின் புரி நகரிலிருந்து தென்மேற்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல், 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தப் புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 3 ஆம் தேதி பிற்பகல் ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபோனி புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோனி புயல் காரணமாக, ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில தலைமைச் செயலர் ஆதித்யா, மத்திய அமைச்சரவை செயலரைத் தொடர்பு கொண்டு, மீட்பு பணிகளுக்காக இரு ஹெலிகாப்டர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.