ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.309.375 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபோனி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபோனி புயலானது, அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிர புயலாக மாறி வடமேற்கு பகுதியில் நகர்ந்து நாளை மாலை ஒடிசாவை நெருங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ.309.375 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஆந்திராவிற்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவிற்கு 340.875 கோடியும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.235.50 கோடியையும் மத்திய உள்துறை அமைச்சம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. ஃபோனி புயலின் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக மீட்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஃபோனி புயல் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழு அளித்த தகவலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.