சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் ”ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க” என்கிற ரீலை உங்களில் பெரும்பாலானவர்கள் பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற பட்டதாரி இளைஞர், தண்ணீருக்குள் இருந்தவாறு வீடியோ போட்டே ஒற்றை ஆளாக தனது கிராமத்தை டிரெண்டாக்கி விட்டார் என்பதுதான் உண்மை.
” ஏங்க.. எங்க ஊரு கூமாப்பட்டி தெரியுமா.. சொர்க்கமுங்க..” என்று வீடியோ போட்டு போட்டு தற்போது டிராவல் பிரியங்களின் கவனத்தை தனது கூமாப்பட்டியை நோக்கி திருப்பி விட்டார்.
இவரின் பேச்சை நம்பி, கடந்த இரண்டு நாட்களாக கூமாப்பட்டியை நோக்கி மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர். ஆனால், சமூக வலைதளங்களில் கூமாப்பட்டி பற்றிய செய்தியை நம்பி, பொதுமக்கள் யாரும் வருகை தந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், பினவக்கல் பெரியாறு அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், கூமாப்பட்டி மாவட்டம் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் (தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக உள்ளார்), நேரில் சென்று அப்பகுதியை புகைப்படம் எடுத்ததுடன், அந்த கிராமம் குறித்த தகவல்களை பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்.. கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர்.
பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும். அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை.
தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்! கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !! " என்று பதிவிட்டுள்ளார்.