அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகநூல்
தமிழ்நாடு

அனல்பறக்கும் அவனியாபுரம்|ஆக்ரோஷமாக பாய்ந்த காளைகள்; முதல் சுற்றிலேயே மாஸ் காட்டிய இளைஞர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன

இந்தவகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்களின் உறுதிமொழியோடு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சீறிவரும் 1,100 காளைகளை 900 மாடுபிடி வீரர்கள் பிடிப்பதற்கு மும்முரமாக போட்டி நடந்து வருகிறது. முன்னதாக, மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.எந்தவித விபரீதமும் ஏற்படாமல் இருக்க அவனியாபுரத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், முதல் சுற்றில் 50 வீரர்கள் மஞ்சள் நிற உடை அணிந்து களம் கண்டனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

வெற்றிப்பெறும் வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிராக்டர் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்தவகையில், முதல் சுற்றில் மணிகண்டன், விக்னேஸ்வரன் ஆகியோர் தலா 3 காளைகளைத் தழுவி முதலிடத்தில் உள்ளனர். வீரர் மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டநிலையில், போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சுஜித் குமார் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து, 2 ஆம் சுற்றில் இளஞ்சிப்பு நிற ஆடை அணிந்து, வீரர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.