தமிழ்நாடு

வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் - நிதி அமைச்சகம்

kaleelrahman

வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க இந்திய வங்கிகளின் சங்கங்கள் தெரிவித்த திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.30,000 முதல் ரூ.35,000-வரை அதிகரிக்கும். இந்த அறிவிப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாக நிதி சேவைகள் துறை செயலாளர் அறிவித்தார்.

குடும்ப ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் இந்திய வங்கிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்ததாகவும், இதற்கு மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நிதி சேவைகள் துறை செயலாளர் தெரிவித்தார்.

தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஊழியர்களின் பங்களிப்பை தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து, 14 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதன் மூலம், ஆயிரக்கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும்.

மும்பைக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ஸ்மார்ட் வங்கி முறைக்கான சீர்திருத்த கொள்கை 'ஈஸ் 4.0 (EASE 4.0) திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.