ஐஐடி பேராசிரியர் பெயரில் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அருணாச்சலம் என்ற காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் காவல்துறை விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில், ஒரு கேள்விக்கு தான் சரியான பதில் எழுதியதாகவும், அதற்கு உரிய மதிப்பெண் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், சரியான விடை எது என்பதை ஐஐடியில் பணியாற்றும் கணித நிபுணரிடம் அறிக்கை பெற்றுத்தரும்படி உத்தரவிட்டனர். அதன்படி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் பணியாற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அனுமதியுடன், செந்தாமரைக் கண்ணனை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.