அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படையினர் பதிலடி கொடுத்திருந்தனர். அப்போது இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்றபோது, விமானம் தாக்கப்பட்டதில், விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துச் சென்றனர். நல்லெண்ண அடிப்படையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
அதன்படி இரண்டு நாள்கள் பாகிஸ்தான் வசமிருந்த அபிநந்தன், மார்ச் 1-ஆம் தேதி இரவு வாகா- அட்டாரி எல்லையில் இந்திய ராணுவத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். கம்பீர நடைபோட்டு வந்த அபிநந்தனை ஒட்டுமொத்த நாடே வரவேற்றது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்தது குறித்து அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில், “ பாகிஸ்தானில் தற்கொலை செய்துகொள்ள கூட நேரமிருந்தது. ஆனால் அது என்நாட்டுக்கு அவமானத்தை தரும். சித்திரவதைகளை அனுபவித்தே உயிரிழப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து நான் உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன்.
அன்றுமாலை எல்லாரும் என்னை சுற்றி அமர்ந்து கொண்டு பிரதமரை பற்றிய கேள்விகளை எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்தேன். பிறகு அது ராணுவ ரகசியம் இல்லை என்பதாலும் அவரை பற்றி உலகமே அறியும் என்பதாலும் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததை கூறினேன். ஒரு சில விஷயங்களை மறைத்தேன். அவர்களின் பிரதான கேள்வியே மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தான்” என்பன உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை அபிநந்தன் எந்தவொரு தன்னிலை விளக்கம் அளித்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.