தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் - போலி மருத்துவ தம்பதி கைது

webteam

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவ தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராம பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று உடல் நிலை மோசமடைந்து அரசு மருத்துவமனை நாடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் தயாளன் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுவினர் போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். 

இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் 6 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் காவலன் தலைமையில் மருத்துவ குழு ஒன்று பள்ளிப்பட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோதனை மேற்கொண்டது. 

இதில், முரளி(42) என்பவர் 10ஆம் வகுப்பு வரையிலும் அவரது மனைவி கிராந்தி(35) ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து விட்டும் கிளினிக் வைத்து பல ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலி மருத்துவ தம்பதியினரை பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவ தம்பதியினரை கைது செய்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பும் போலி மருத்துவர் முரளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.