கைதான போலி சித்த மருத்துவருக்கு 20-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை கோயம்பேட்டில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த திருத்தணிகாசலம் ஜனவரி மாத இறுதியில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை தாம் கண்டுபிடித்துவிட்டதாக கூறினார். அது தொடர்பாக பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர், கொரோனாவுக்கு கபசுரக் குடிநீரை விட வாதசுர குடிநீர் சிறந்த மருந்தாக இருக்கும் என்று கூறினார். "எனது உடலில் கொரோனா வைரஸை செலுத்துங்கள், நான் கண்டுபிடித்த மருந்து மூலம் குணமடைந்து காட்டுகிறேன் என சவால் விடுத்தார்". ஒரு கட்டத்தில் கொரோனாவை விட வேகமாக கொதித்தெழுந்த திருத்தணிகாசலம் "இன்னும் எத்தனை பேரை கொல்லப்போகிறீர்கள்?" எனப்பொங்கினார்.
திருத்தணிகாச்சலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தன. அவரது கருத்துகளை வைத்து நெட்டிசன்கள் டிஜிட்டல் யுத்தம் நடத்தினர். 3 மாதங்களாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட்டதால் வில்லங்கம் திருத்தணிகாச்சலத்தை தேடி வந்தது. மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் திருத்தணிகாச்சலம் என அறிவிப்பு வெளியிட்டது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை. மேலும் தவறான செய்தியைப் பரப்பி மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் செயல்படுவதாக திருத்தணிகாச்சலம் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர். அதனைத் தொடர்ந்து தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரழிவு மேலாண்மைச் சட்டம், உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் திருத்தணிகாச்சலம் மீது வழக்குப்பதிவுசெய்த காவல்துறையினர் திருத்தணி அருகே அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதான போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு வருகிற 20 ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சைதாபேட்டை சப்ஜெயிலில் அடைத்தனர்.