கோவையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கான கள்ள நோட்டுளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை சாய்பாபா காலனியில் நேற்றிரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கரவாகனத்தில் வந்த ஆனந்த் என்பவர் தனது கைப்பையை காவல்துறையினரிடம் இருந்து மறைக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது கைப்பையை சோதனை செய்த போது அதில் 2000 ரூபாய் தாள்கள் அதிகளவில் இருந்தன. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பையில் இருந்தவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதை ஆனந்த் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தடாகம் சாலையில் உள்ள வேலாண்டிபாளையம் என்னுமிடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்டவை அனைத்தும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகும். கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கணினி, பிரிண்டர், கட்டிங் இயந்திரம் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.