போலி ஏ.டி.எம் கார்டு மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை சென்னையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானலைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கொடைக்கானலில் உள்ள தனது திரையரங்குக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாகக் கூறி, அவர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருடி விட்டதாக புகார் கூறியிருந்தார். மேலும் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம்-மில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தனிப்படை அமைத்து கார்த்திக்கை தேடி வந்த சென்னை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் உண்மையான பெயர் இம்ரான் கான் என்பதும், ஏற்கனவே அவர் மீது இதுபோன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திரையரங்குக்கு வந்த வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் விவரங்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடி, அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து இம்ரான்கான் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். அவரிடமிருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.