சென்னையில் ஆன்லைன் மூலம் கட்டில், மெத்தையை விற்க நினைத்தவரிடம் ஒரு கும்பல் க்யூஆர் கோர்டு மூலம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். இவர் இந்திய கப்பற்படையில் பணிபுரிந்து வரும் மூத்த பொறியாளர். பிரேம் ஆனந்த் தனது வீட்டில் இருந்த மெத்தையுடன் சேர்ந்த கட்டில் ஒன்றை "குயிக்கர்" (quikr) இணையதளம் மூலம் விற்பனைக்கு என பதிவிட்டார். ரூ.10,500 என விலையை பதிவிட்டிருந்தார். அத்துடன் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்து ராணுவ அதிகாரி என கூறி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அத்துடன் ராணுவ அதிகாரி என்று பேசிய நபர், அடையாள அட்டையை அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் வாட்ஸ்அப்பில் க்யூஆர் கோட் ஒன்றை அனுப்பி ஸ்கேன் செய்யுமாறும், அதன் ஸ்கேன் செய்தவுடன் பணத்தை அனுப்புமாறும் அந்த நபர் கூறியிருக்கிறார். அத்துடன் ராணுவத்தில் வவுச்சர் தான் கொடுப்பார்கள் என கூறியிருக்கிறார். அவர் சொன்னபடியே பிரேம் ஆனந்த் ஸ்கேன் செய்தவுடன், முதலில் ரூ.5 வந்ததுள்ளது. பின்னர் மீண்டும் ஒரு க்யூ ஆர் கோர்டை அந்த நபர் அனுப்பியுள்ளார். அதனை ஸ்கேன் செய்தபோது 3 முறை என மொத்தமாக ரூ.50 ஆயிரம் பிரேம் ஆனந்த வங்கி கணக்கில் இருந்து அந்த நபர் எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்து கேட்டபோது வீட்டிற்கே பணத்தை வந்து தருவதாக கூறி செல்போனை அந்த நபர் சுவிட்ச்ஆப் செய்துள்ளார்.
பணத்தை பறித்த நபர் குறித்து பிரேம் ஆனந்த் ஆன்லைனில் தேடியபோது அவர் உண்மையான ராணுவ அதிகாரியே இல்லை என்றும் ,மோசடி பேர்வழி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆன்லைன் மூலமாக பணத்தை பறிகொடுத்தது தொடர்பாக பிரேம் ஆனந்த் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என அவர் கூறியுள்ளார். அவரிடம் பணத்தை பறித்தது ஒரு மோசடி கும்பல் எனவும், அதே தினத்தில் அவர்கள் ரூ.8 லட்சம் வரை ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.