தமிழ்நாடு

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’ : கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’ : கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

rajakannan

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்றவர்களுக்கு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக, தமிழக மாணவர்கள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களும் வாட்ஸ் அப் மூலமாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். ‘தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவி செய்த கேரள அரசுக்கு நன்றிகள்’ என்றே பெரும்பாலானோர் மெஜேஜ் அனுப்பி இருந்தனர். 

தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கேரளாவில் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்திலேயே நீட் தேர்வுக்கான மையங்கள் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வார்கள் என பல்வேறு தரப்பினர்கள் கூறினர். இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பணமும், போக்குவரத்திற்கான பணமும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாகவும அதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு இந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்தன. 

இதனையடுத்து, கேரளாவில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உதவ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக உத்தரவிட்டார். 

மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் சிறப்பாக இருக்கத் தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் உதவி தேவைப்பட்டால் 9061518888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார். பிரச்னைகள் இருந்தால் cmo.kerala.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றும் கேரள முதலமைச்சரின் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

மே 6ம் தேதி நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில், தங்களுக்கு கேரள அரசு செய்து கொடுத்த உதவிகளுக்கு தமிழக மாணவர்கள் ட்விட்டர், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி மூலமாக நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜன் அனுப்பிய குறுஞ்செய்தியில், “தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுந்த வந்த மாணவர்களுக்கு உதவிகள் செய்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எங்களது உறுதியான நன்றிகளை தெரிவிக்கவும். உரிய நேரத்தில் கிடைத்த இந்த உதவியை மறக்கமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும் உங்கள் மனப்பான்மைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். நீங்களும், உங்களது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழட்டும்’ என்று யுபிஎஸ்சி போட்டியாளர் அருண் அனுப்பிய செய்தியில் கூறியிருந்தார். தர்மபுரியைச் சேர்ந்த சிவ பாலசந்திரன் கூறுகையில், “எர்ணாகுளம், எலமக்கரா பகுதியில் உள்ள பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்தோம். தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த கேரள முதல்வருக்கு நன்றி. இந்த உதவி மிகவும் சிறப்பானதாகவும், மற்றவர்கள் பின்பற்றக் கூடிய வகையிலும் இருந்தன. கேரள அரசுக்கும், முதலமைச்சருக்கும் எங்களது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கவும்” என்றார்.

அதேபோல், கேரள முதலமைச்சருக்கு மட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள தமிழ் சங்கத்திற்கும் மாணவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். 

courtesy: thenewsminute