காக்கா ஒன்று தான் விரும்பிய பெரிய மீனை வியாபாரியிடம் இருந்து பெற்றுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிறுவயதில் நாம் அனைவரும் காக்கா கதை ஒன்றை கேள்விப்பட்டிருப்போம். காகம், பாட்டியிடம் இருந்து எடுக்கும் வடையை, கள்ளத்தனம் மிக்க நரியிடம் இருந்து தனது அதிபுத்திசாலிசனத்தால் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால் இங்கு அதிபுத்திசாலியான காகம் ஒன்று தனக்குப் பிடித்த மீனை, மீன் வியாபாரியிடம் இருந்து பெற்றுச் செல்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில், மீன் வியாபாரி முன்பு நிறைய மீன்கள் கிடக்கின்றன. அதில் சிறிய மீன், பெரிய மீன் எனப் பல வகையான மீன்கள் உள்ளன. அங்கு மீனை எடுக்க காத்திருக்கும் காகத்திடம் மீன் வியாபாரி ஒரு சிறிய மீனை எடுத்துக் கொள்ளுமாறு கை காட்டுகிறார். ஆனால் ‘அந்த மீன் வேண்டாம்’ என மறுக்கும் காகம், ‘கா.. கா ’ எனக் கரைகிறது. பின்னர் வேறு ஒரு மீனின் பெயரைச் சொல்லி இந்த மீனை சாப்பிடு எனக் கொடுக்கிறார் மீன் வியாபாரி. ஆனால் அதனையும் பெற காகம் மறுத்துவிடுகிறது. இப்படி தொடர்ச்சியாக சின்னச்சின்ன மீன்களை வேண்டும் என புறந்தள்ளி வந்த காகம், இறுதியாக தான் விரும்பிய பெரிய மீனை வியாபாரி கொடுத்தவுடன் ‘லபக்’ எனக் கவ்விக் கொண்டு அவ்விடத்தை விட்டு பறந்தோடுகிறது. இந்த வீடியோவை ரசித்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.