தமிழ்நாடு

மூடப்படாத ஆழ்துளைக் கிணறு குறித்த ஃபேஸ்புக் பதிவு: உடனடியாக நடவடிக்கை எடுத்த நண்பர்கள்..!

Rasus

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு குறித்து ஜெயமோகன் சுந்தரராஜ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதனையடுத்து ஃபேஸ்புக் நண்பர்கள், ஊராட்சி செயலர் உள்பட பலர் இணைந்து ஆழ்துளை கிணறை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது.

இதனிடையே சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை நடைபெறுகிறது. #PrayForSurjith #SaveSurjith போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. ஆழ்துளை கிணறுகளை மூட அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் தான் இதுபோன்ற விபத்துகள் இனி வரும் காலங்களில் நிகழாது என்ற ஒரு பேச்சும் நிலவுகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் லட்சுமிபுரம் கால்நடை மருத்துவமனை எதிரே அங்கன்வாடி மையம் பின்புறம் பயன்படாத ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்தது குறித்து ஜெயமோகன் சுந்தரராஜ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதனைப் பார்த்த,  லட்சுமிபுரம் ஊராட்சி செயலர் மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் பலர், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறை தற்காலிகமாக மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பான புகைப்படங்களையும் ஜெயமோகன் சுந்தரராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உங்கள் அருகாமையில் ஏதேனும் இதுபோன்று மூடப்படாத ஆழ்துளைக் கிணறு இருந்தால் அதனை முதல்வேலையாக முறைப்படி மூடி நீங்களும் நடவடிக்கை எடுக்கலாம்.