அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடே நியூட்ரினோ மையம் அமைக்க சிறந்த இடம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் “பொதுமக்களுக்கு நியூட்ரினோ திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு பொதுமக்களுடன் நியூட்ரினோ திட்டம் குறித்து கருத்துக் கேட்பு கூட்டமும்,விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது. அப்போது இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் அபரிமிதமான ஆதரவையும் அளித்தனர்.
மேலும் இது குறித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலந்துரையாடல் கூட்டமும் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது” என மத்திய அமைச்சர் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.