தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரியின் உபரிநீர் திறக்க வாய்ப்பு: 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

JustinDurai
மதுராந்தகம் ஏரியின் உபரி நீர் எந்த நேரத்திலும் திறக்கப்பட உள்ளதால் கிளி ஆற்றங்கரையோர வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 22.9 அடியாக உள்ளது. இன்னும் ஏரி நிரம்பி வழிய 4 அங்குலமே நீர்வரத்து வர வேண்டியுள்ளது. ஏரியின் நீர்வரத்து பகுதியான உத்திரமேரூர் மதகு மற்றும் கிளி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏரி எந்த நேரத்திலும் நிரம்பும் நிலை உள்ளது.
எனவேஉபரிநீர் கிளி ஆறு மூலம் வெளியேற்றப்பட உள்ளதால், கிளி ஆற்றின் வலது, இடது கரையோரத்தில் அமைந்துள்ள தோட்ட நாவல் இருசம நல்லூர், கேகே புதூர், ஈசூர் உள்ளிட்ட 21 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளி ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.