தமிழ்நாடு

குடிநீர் தேவையை சமாளிக்க‌ கூடுதலாக ரூ.100 கோடி நிதி: முதலமைச்சர்

Rasus

நூற்று நாற்பது ஆண்டுகளில் இல்லாத வறட்சியை எதிர்கொண்டு வரும் தமிழகம், தாகத்தில் தவிக்கிறது. பல்வேறு இடங்களில் நிலத்தடி நீரும் கைக்கொடுக்காத நிலையில், குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் பயணப்படும் நிலை உள்ளது. இந்த வேதனை சூழலை தொடர்ந்து புதிய தலைமுறை பதிவு செய்துவருகிறது.

இந்நிலையில், கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 100 கோடி ரூபாயை ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ‌ஆலோசனைக்குப்பிறகு கோடைகால குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 100 கோடி ரூபாயை ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். கால்நடை தீவன தேவைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்டங்களில் நடைபெற்றுவரும் வறட்சி நிவாரணப்‌பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஒருவார காலத்திற்குள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் ‌அனைத்துக்குடிநீர் ‌திட்டங்களிலும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.