ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என பரவும் தகவல்கள் சரியல்ல என்று உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பணிகளை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக பொருட்கள் வழங்கவேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ’ஸ்மார்ட் கார்டுகள் இல்லாதவர்களும் ரேஷன் கடைகளில் பழைய ரேஷன் அட்டை மூலம் பொருட்களை பெற முடியும்’ என நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது. ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.