கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் முகநூல்
தமிழ்நாடு

கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக சிபிசிஎல் விளக்கம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து 11 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதற்கிடையே எண்ணூர் அருகே கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது. அதை அகற்றும் பணி 2 ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கச்சா எண்ணெய் கசிவால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து மீனவர்கள் தவித்து வருகின்றனர். கடலுக்கு செல்ல முடியாத நிலை நீடிப்பதால், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் உள்ளூர் மீனவர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “மாநில அரசின் வழிகாட்டுதல்படி பணிகளை 24 மணி நேரம் கண்காணித்து வருகிறோம். கடலில் எண்ணெய் பரவுவதை தடுக்க மிதவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்படி எண்ணெயை அகற்ற உரிய கருவிகளை பயன்படுத்துகிறோம். எண்ணூர் பகுதிகளில் எண்ணெய் கசிவை அகற்ற சுமார் 60 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் எண்ணெய்யை அகற்றும் பணியில் தனியார் நிறுவனத்தையும் ஈடுபடுத்தியுள்ளோம்.

சிபிசிஎல் எண்ணெய் குழாயிலிருந்து கசிவு ஏற்படவில்லை. வெள்ளத்தால் கால்வாய்க்குள் இருந்த நீர் ஆலைக்குள் புகுந்து எண்ணெய்யை இழுத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில் ஆலையினுள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் எண்ணெய் வெளியேறியுள்ளது. உரிய முன்னேற்பாடுகள் செய்திருந்தும் கனமழை, வெள்ளத்தால் எண்ணெய் வெளியேறி விட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் எண்ணெய் கழிவு விவகாரத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தனது X தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில்,

“கழிவுகளை அகற்றும் பணி 11.12.2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. 12.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது” என்றுள்ளார்.

முன்னதாக மீன்வளத்துறை அதிகாரிகள் காட்டுக்குப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் 7 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.