முன்னாள் எம்எல்ஏ விளக்கம் pt desk
தமிழ்நாடு

”கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிட்டாங்க” - அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கையை பெரும்பாலான தமிழக அரசியல் கட்சியினர் எதிர்த்து வரும் நிலையில், அந்த கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் திருவள்ளூர் வடக்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கழகத்தின் கொள்ளை கோட்பாடுகளுக்கும் குறிக்கோளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால்

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை எடுத்து முடிவு குறித்து முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் தொலைபேசி வாயிலாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்...

”நான் எங்கள் கிராமத்து வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பாஜகவினர் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து எனது காரை வழிமறித்த அவர்கள், என்னிடம் கையெழுத்து கேட்டார்கள். அதற்கு நான் இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எங்களது பொதுச் செயலாளரின் இருமொழிக் கொள்கைதான் எங்களுக்கும் என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் ஒன்னும் பிரச்னை இல்லண்ணே கையெழுத்து போடுங்கன்னு சொன்னாங்க. அதற்கு நான் வீடியோவெல்லாம் எடுப்பீங்க என்று சொன்னேன். நானும் வேண்டாம் வேண்டாம்னு எத்தனையோ முறை கூறினேன். பரவா இல்லண்ணே கையெழுத்து போடுகன்னு உள்ளூர் பாஜக பொறுப்பாளர்கள் கேட்டதால் கையெழுத்து போட்டேன். நடந்த விசயத்தை எங்கள் பொதுச் செயலாளரிடம் சொல்லி அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வேன்” என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.