செய்தியாளர்: இஸ்மாயில்
திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண்சரிவுக்கான காரணத்தை அறிய ஐஐடி நிபுணர் நேற்று குழு நேரில் ஆய்வு செய்தனர். அதன்முடிவில் மண்ணின் தன்மைக்கும், இந்த விபத்துக்கும் தொடர்பு இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் நேரிட்ட நிலச்சரிவையும், அது ஏற்படுத்திய பாதிப்புகளையும் நாம் பார்த்திருந்தோம். வயநாட்டில் மேகவெடிப்பால் அதீத மழை பொழிந்து இந்த பேரிடர் நேரிட்டதாக வல்லுநர்கள் கூறினர். இப்போது, திருவண்ணாமலையில் நடந்ததும் அப்படித்தான் இருக்கிறது.
திருவண்ணாமலை மலையில் இருந்து மண்ணும், சேறும், சகதியுமாக சரிந்து பெருக்கெடுத்து ஆறு போல ஓடி வரும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த சேறும், சகதியுமான மண் சரிவோடு பாறைகளும் உருண்டதில், ஏழு உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அந்த கொடூரமான சம்பவம் திருவண்ணாமலை மக்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் திருவண்ணாமலை மலையில் என்ன நடந்தது என்பதுபற்றி இந்த மண் சரிவுக்கு என்ன காரணம் என்று ஐஐடி நிபுணர் குழு ஆய்வு செய்தது.
பேராசிரியர்கள் பூமிநாதன், மோகன், நரசிம்ம ராவ் ஆகியோர் மண்சரிவு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். திடீரென அதிகப்படியான மழை தொடர்ந்து பெய்யும்போது, பாறைகள் சரிந்து மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவிலுள்ள பேராசிரியர் மோகன் தெரிவித்துள்ளார். மண்சரிவு ஏற்பட்டதோடு நில்லாமல், திருவண்ணாமலை மலையில் ஆங்காங்கே அருவிகள் தோன்றியிருக்கின்றன.
மலையில் இதுவரை அருவிகள் இல்லாத நிலையில் இந்த காட்சி, மலையின் உறுதித்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே மண் சரிவு நேரிட்ட இடத்தை ஆய்வு செய்திருந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “இதுபோன்ற மண் சரிவை கடந்த 70 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சந்தித்ததில்லை. அதற்கு முன்பும் இவ்வாறு நேரிட்டிருப்பதாக தெரியவில்லை” என்று கூறினார். இந்த பகுதியின் புவியியல் அமைப்பை ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.